என்னைப் பற்றி

என் பெயர் த. வசந்தாள். என்னைப் பற்றிய விவரங்கள் தன் விவரக் குறிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட ஆழ்ந்த ஈடுபாடும் தொடர்ந்து கற்றறியும் மனப்பாங்கும் என் பெற்றோர் திருமிகு ச. தங்கமணி - திருமிகு வள்ளியம்மாள் அவர்களின் அருளால் இலக்கியப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆசிரியர் வாழ்க்கை

1987இல் முனைவர்பட்ட ஆய்வேட்டைச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அளித்தேன்.; தொடர்ந்து 27 ஆண்டுகள் எதிராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினேன். பணி நிறைவுக்குப் பிறகு அறிவியல் உலகம் என்னைத் தமிழை இணைய உலகில் சேர்க்கத் தூண்டியது. குறுந்தொகைப் பாடல்கள் பாடல்கள் எனக்கு ஒலி உரை சொல்லுங்களேன் எனக் கேட்டன. பாடல்களின் ஆழமும் அழகும் என்னை ஒலி உரை சொல்ல வைத்தன. பணி நிறைவு பெற்ற பிறகும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கின்றேன். கற்றலும் கற்பிப்பும் என் வாழ்வின் தொடர்ச்சியான பயணமாக உள்ளது.

பேராசிரியர் த. வசந்தாள்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஏழு ஆண்டுகள் முதுகலை மற்றும் ஆய்வு மாணவராக இருந்தேன், அங்கு நடைபெற்ற பொழிவுகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பயிற்சி வகுப்புகள், பணிமனைகள் மற்றும் கருத்தரங்குகள் என் தமிழறிவை மேலும் வளப்படுத்தின.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் கற்பித்த ஆசிரியர்களும், இளங்கலை முதல் முதுகலை வரை பாடம் நடத்திய பேராசிரியர்களும் மிகுந்த நேர்த்தியுடன் கற்பித்தனர். அவர்களின் வழிகாட்டுதல் என் இலக்கியப் பார்வையை ஆழப்படுத்தியது.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஏழு ஆண்டுகள் முதுகலை மற்றும் ஆய்வு மாணவராக இருந்தேன், அங்கு நடைபெற்ற பொழிவுகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பயிற்சி வகுப்புகள், பணிமனைகள் மற்றும் கருத்தரங்குகள் என் தமிழறிவை மேலும் வளப்படுத்தின.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் கற்பித்த ஆசிரியர்களும், இளங்கலை முதல் முதுகலை வரை பாடம் நடத்திய பேராசிரியர்களும் மிகுந்த நேர்த்தியுடன் கற்பித்தனர். அவர்களின் வழிகாட்டுதல் என் இலக்கியப் பார்வையை ஆழப்படுத்தியது.

ஏன் குறுந்தொகைக்கு ஒலி உரை?

சங்க இலக்கியங்கள் தொல்தமிழனின் நாகரீகத்தையும் பண்பாட்டையும் பொதிந்து வைத்திருக்கும் ஆவணக் களஞ்சியம் ஆகும். அவை அகம் புறம் என இரு வகைப்படும். சங்க இலக்கியங்கள் பொருள் நலமும் நடைநலமும் நிறைந்தவை; சிறப்பாகக் குறுந்தொகைப் பாடல்கள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை. நோய் தொற்றுக் காலத்தில்(கரோனா) வாழ்வு அறைக்குள் அடைபட்ட பொழுது ஏன் குறுந்தொகைக்கு ஒலி உரை சொல்லக்கூடாது என்னும் எண்ணம் மனதில் துளிர்த்தது. ஏனென்றால் குறுந்தொகைப் பாடலின் பொருளை ஒலி உரையாகக் குறுகிய நேரத்தில் முடிக்க முடியும். அதுமட்டுமன்று அவை நுண்ணுணர்வு தளும்பும் அன்பு மிகு காதலர்களின் மனநிலையை விவரிப்பதால் கேட்போரையும் சோர்வடையச் செய்யாமல் இருக்கும் என்பதால் முதலில் மடிக்கணினியில் 401 பாடல்களுக்கும் ஒலி உரை சொல்லி முடித்தேன்.

கரோனா காலத்தில் உயர்நீதி மன்ற வழக்குகளை இணையவழி நடத்தலாம் என அறிவிப்பு வந்ததும் அதைப் பயன்படுத்த நினைத்த என் மகன் நான் வேறு இடத்தில் சேமித்து வைத்திருப்பேன் எனக் கருதி இடம் வேண்டி அப்பதிவுகளை நீக்கி விட்டான், ஆனால் இல்லிருப்பு என்பது நோய்தொற்றால் தொடர்ந்தது. எனவே கைபேசியில் மீண்டும் 401 பாடல்களுக்கும் ஒலி உரையைச் சொல்லி நிறைவுசெய்தேன். அவ்வுரை 37 மணி நேரம் 06 நிமிடமாக உங்கள் முன்பு விரிகிறது. ஒலி உரை என்னவோ 37 மணி நேரம்தான் என்றாலும் என்னுடைய இரண்டாண்டு கால உழைப்பும் நிறைந்ததுதான்.

குறுந்தொகையில் 307, 391 ஆகிய பாடல்கள் தவிர ஏனையவை 4 அடி முதல் 8 அடிவரை உள்ள பாடல்கள் ஆகும் இவற்றை 205 புலவர்கள் பாடியுள்ளனர்; பாடலடியால் பெயர் பெற்ற புலவர்கள் உள்ளனர்; பெயர் தெரியாத புலவர்களும் உள்ளனர். குறுகிய அடிகளில் ஆழமான உணர்வுகளையும் வாழ்க்கைச் சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் இந்தப் பாடல்கள், ஒலி உரை வடிவில் மக்களிடம் சேர வேண்டும் என்று எண்ணினேன்.

குறிப்பு:

குறுந்தொகை பற்றிய திறனாய்வு நூல் அச்சில் உள்ளது. குறுந்தொகையின் இலக்கியக் கோட்பாடுகளை அறிந்துகொள்ள மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழிலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் ஒரு வரலாற்றுப் பார்வை (2023). என்னும் நூலில் அறிந்துகொள்ளுங்கள்,

குறுந்தொகை வழி தமிழின் தொன்மை

  • சங்க அக நூல்களில் ஒன்று

  • மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கைப் பதிவுகள்

  • ஐவகை நிலங்கள், மக்கள் வாழ்க்கை , பண்பாடு, வணிகம், இயற்கை அறிவு….. பற்றிய செய்திகள்

  • தொல்காப்பியத்தின் அகத்திணை இலக்கியக் கோட்பாட்டிற்கான இலக்கியமாக அமைந்தது.