குறுந்தொகை: பாடல் 151

குறுந்தொகை 151 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

வங்காக் கடந்த செங் காற் பேடை

எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது,

குழல் இசைக் குரல குறும் பல அகவும்

குன்று உறு சிறு நெறி அரிய என்னாது,

''மறப்பு அருங் காதலி ஒழிய

இறப்பல்'' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே.

பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

தூங்கலோரி

வங்கா - பறவை

எழால் - புல்லூறு என்னும் ஒருவகை வன் பறவை

அகவுதல் - அழைத்தல்,

கூவுதல்

சிறு நெறி - ஒடுங்கிய வழி

அரிய - அருமை

ஏ - தேற்றகாரம்

வக்கா¹ vakkā , n. baka. White stork, Ardea nivea; கொக்குவகை. வக்காவு நாரையுங் கொக்கும் படுக்கவே (குற்றா. குற. 93, 2).

வங்கா - வக்கா (வையாபுரிப்பிள்ளை அகராதி)

தொல்காப்பியம் சொல்லதிகாரம் நூற்பா 225

ஆகார ஈறு வேற்றுமை ஏற்கும் பொழுது அல்வழிப் புணர்ச்சி போலவே வருமொழியில் வல்லெழுத்து வரும்பொழுது வல்லெழுத்து மிகும் என்கிறது.

இந் நூற்பாவுக்கு உரை

தாரா , மூங்கா,வங்கா காட்டும் பறவைகளுள் ஒன்று வங்கா.

வங்கா+கால் - வங்காக்கால்

வங்கா+ செவி/தலை/புறா அவ்வாறே வரும்.

இப் பறவையை white stork,Ardea Nivea என்பர்.

நன்றி

http://tamil concordance.in