குறுந்தொகை: பாடல் 267
குறுந்தொகை 267 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன் இயைவதுஆயினும், கரும்பின்
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க்
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய,
ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நற்கு அறிந்திசினோரே.
''மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்'' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, செலவு அழுங்கியது.
காலெறி கடிகையார்
கால் - கரும்பின் அடிப் பகுதி
கடிகை - துண்டம்
வால் எயிறு - ஒள்ளிய எயிறு
வசை - குற்றம்
தீம் நீர் - இனிய நீர்
கோல் - திரட்சி
குறுந்தொடி - சிறிய வளையல்
நாளும் - ஒவ்வொரு நாளும்
உறல் - நிகழுதல்,உறுதல், பொருந்துதல்,வருதல்
உறல் முறை - நிகழும் முறை
அறன் இல் கோள் - அறம் அற்ற/ கண்ணோட்டம் இல்லாத கொலைத் தொழில்
நற்கு - நன்கு
இசின் - அசை நிலை
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு (குறுந்.283:3)
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள்.(குறள்.751)
பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்(குறள்.1121)
