குறுந்தொகை: பாடல் 401
குறுந்தொகை 401 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
அடும்பின் ஆய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்
நக்கு விளையாடலும் கடிந்தன்று
ஐதே கம்ம மெய் தோய் நட்பே.
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது.
-அம்மூவன்
அடும்பு - நெய்தல் நிலப் பூங்கொடி
ஆய்மலர் - ஆய்ந்து பறித்த மலர்
விரைஇ - விரவி,கலந்து
நெடுந் தொடை - நீண்ட மாலை
வேய்ந்த - சூடிய
ஓரை - விளையாட்டு
ஓரை மகளிர் - விளையாட்டு மகளிர்
ஈர் - ஈரம்
ஞெண்டு - நண்டு
பரிதல் - செல்லுதல்
துறைவன் - நெய்தல் நிலத் தலைவன்
கடிந்தன்று - கடிந்தது விலக்கியது
ஐதே கம்ம - (ஐது+ஏகு+அம்ம)
ஐது - வியப்பு
ஏகு - அசை நிலை
அம்ம - வியப்பிடைச்சொல்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த/
சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி!/
ஒரு நாள் துறைவன் துறப்பின்/
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே;(குறுந்.326:2-5)
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்/
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு (குறுந்.117:1-2)
--------------------------
ஓரை மகளிர்
குறுந். 316:5,401:3
நற்.398:5
கலி. 75:4
-----------------------
ஓரை ஆயம்
ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர் (புறம்.176:1)
ஓரை ஆயம் (அகம்.219:2 , நற்.143:3, குறுந்.48:3)
-----------
ஓரை
நற்.68:1,அகம்.49:16,60:11,கலி.82:9
----------------------------------------
ஓரையும் (ஓரை+உம்)
நற்.155:1
----------------------------------------
நன்றி - http ://tamil concordance.in
