திருக்குறள்- 69. தூது
திருக்குறள் 69. தூது அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
69. தூது
681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம்
பண்புடைமை தூதுஉரைப்பான் பண்பு
682. அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று
683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினைஉரைப்பான் பண்பு
684. அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு
685. தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது
686. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது
687. கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை
688. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழிஉரைப்பான் பண்பு
689. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்
690. இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது
